சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.

இந்த ஆண்டு பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை கொரோனா அச்சம் காரணமாக திட்டமிட்டபடி நடத்த இயலவில்லை. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார்கள் படக்குழுவினர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை குறைந்த பிறகு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கினார்கள் படக்குழுவினர். அதனை தொடர்ந்து இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அண்மையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் ‘அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அன்றே சொன்ன அஜித்: திடீரென வைரலாகும் தல அஜித்தின் ‘பில்லா’ பட பாடல்!
இந்நிலையில் நடிகை குஷ்பு அண்ணாத்த படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துவிட்டதாகவும் படம் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 28 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் எப்படி இருந்தாரோ, அதே போல் தற்போது ‘அண்ணாத்த’ படத்திலும் இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் அண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்த’ படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருத்துள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக டப்பிங் முடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.