அதன்பிறகு ஜடேஜாவுக்கு மட்டுமே அவ்வப்போது XI அணியில் வாய்ப்பு கிடைத்து வந்தது. அஸ்வின் XI அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டு வந்தார். இந்த சமயத்தில் 2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றி, வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து பேட்டி கொடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அஸ்வினை மட்டம்தட்டி, குல்தீபை புகழ்ந்து பேசினார். அது, “ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலத்தில் முடிவு வரும். தற்போது குல்தீப் காலம் துவங்கிவிட்டது. வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் குல்தீப்தான் நம்பர் 1 பௌலர்” என்ற வரிதான்.
அஸ்வின் பேட்டி:
இந்த பேட்டியை பார்த்தபிறகு அஸ்வின், கடும் மன உளைச்சலுடன் இருந்தது தற்போது வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. அதனை அஸ்வினே வெளிப்படையாகப் பேசியுள்ளார். “ரவி சாஸ்திரி மீது அதிக மதிப்பு உள்ளது. அனைவருக்கும் கருத்து கூற முழு உரிமை இருக்கிறது. ஆனால், அவர் பேட்டிகொடுத்த அந்த நொடி, நான் முற்றிலும் நொறுங்கிவிட்டேன். சக வீரரின் வெற்றியில் மகிழ்ச்சி கொள்பவன் நான். அந்த வகையில் குல்தீப் சிறப்பாக செயல்பட்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். ஆஸ்திரேலியாவில் ஸ்பின்னர் 5 விக்கெட்களை எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான்கூட எடுத்ததில்லை. ஆனாலும், ஒரு வீரரை புகழ்வதற்காக, மற்றவரை கீழே தள்ளக் கூடாது” எனக் கூறினார்.
உருக்கம்:
“குல்தீப்பின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்து, அவரை வாழ்த்திக் கொண்டாடினால் மட்டுமே நானும் ஒருநாள் வெற்றிபெற முடியும். ஆனால், நான் தூக்கியெறியப்பட்டதாக நினைத்தால், எப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? உடனே எனது அறைக்குச் சென்றேன். மனைவியிடம் இதனை கூறி ஆறுதல் அடைந்து, பிறகு மீண்டும் வந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். ஏனென்றால், அது எனது அணியின் வெற்றி” என்றார்.
தற்போது ஒருநாள், டி20 அணிகளுக்கு புதிதாகப் பதவியேற்றுள்ள ரோஹித் ஷர்மா, அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதனால், இனி வரும் போட்டிகளில் ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஸ்வின் அபாரமாகச் செயல்படுவார் என தெரிகிறது.