Motivational Tales
oi-G Uma
பெண்களுக்கு அது தர வேண்டும்.. இது தர வேண்டும் என்றெல்லாம் இப்போது பெண்கள் யாரிடமும் கேட்பதில்லை. எங்களுக்கான இடத்தை எங்களிடமே விட்டு விடுங்கள்.. அது போதும் என்பதுதான் அவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.
என்றுமே எதையுமே அடக்கி வைத்திருக்க முடியாது. பெண்களை அடக்க அடக்க அவர்கள் விஸ்வரூபம் எடுப்பார்களே தவிர அமிழ்ந்து போய் விட மாட்டார்கள். இதை பெண்கள் சமுதாயம் தினந்தோறும் நிரூபித்து வருகிறது.
பெண்களுக்கு ஈடு இணையான சக்தி எதுவுமே கிடையாது. உண்மையில் ஆண்களை விட பெண்கள் பல விஷயங்களில் ஒசத்தியானவர்கள். இதை ஆண்கள் கண்டிப்பாக ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். உடல் வலிமையை விட்டுத் தள்ளுங்கள்.. உள்ள வலிமையில் பெண்களுக்கு நிகர் பெண்களே.!
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கேற்ப தாயாய் தங்கையாய் அக்காவாக தாரமாய் மகளாய் பல அவதாரங்கள் எடுக்கும் சக்தியுடையவள் பெண். பராசக்தியின் அம்சமாக விளங்குபவள் பெண். பொறுமையும் சகிப்புத்தன்மையும் உடையவள் பெண். எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும் சரி எந்த செயலை அவர்களிடம் செய்யச் சொன்னாலும் அதைத் திறம்பட செய்வதில் வல்லவர்கள்.
எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிப்பதில் வல்லவர்கள் பெண்கள். தங்கள் பிள்ளைகளுக்காக எந்தத் தியாகமும் செய்வார்கள். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்பதை உடைத்து இன்னு பல துறைகளிலும் பெண்கள் சாதனைப் படைத்து வருகின்றனர். தொழில்நுட்பத்துறை விமானத்துறை உற்பத்தித்துறை பொதுப்பணித்துறை விவசாயத்துறை அரசியல் போக்குவரத்துத் துறை மருத்துவத்துறை உணவு பாதுகாப்புத் துறை காவல்துறை உளவுத்துறை விஞ்ஞானத்துறை வங்கித்துறை கல்வித்துறை இப்படி அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னோடியாக விளங்குகின்றனர்.
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்று பெண்கள் நிரூபித்துள்ளனர். நம் நாட்டை ஆள்வதிலும் பெண்கள் சாதனைப் படைத்துள்ளனர். வேலுநாச்சியார் ஜான்சிராணி ராணி லக்ஷ்மி பாய் போன்றோர் நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டனர். இந்திராகாந்தி ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கள் நம் நாட்டை ஆண்டுள்ளனர். கல்பனா சாவ்லா முதல் சானியா மிர்சா வரை எங்கும் பெண்கள் எல்லாப் பெண்கள்.
பெண்கள் காய்கறி விற்பதோடு நிற்கவில்லை கணினியும் விற்கின்றனர். ஆட்டோ மட்டும் ஓட்டவில்லை, அவர்கள் பேருந்து முதல் விமானம் வரை ஓட்டுகின்றனர். இன்று பல பெண்கள் சிறந்த தொழில் முனைவோராக இருக்கின்றனர். பத்து மாதம் ஒரு குழந்தையை அவள் மனதாலும் உடலாலும் சுமக்கிறாள். தன் குழந்தை வெளியே வருவதற்காக வயிற்றைக் கிழித்து இரத்தமும் சதையுமாக வெளி வரும் தன் குழந்தையின் வரவிற்காக தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்.
பெண்களை போகப் பொருளாக மட்டும் பார்க்காதீர்கள். உடலிலிருந்து மாதம் மூன்று நாட்கள் இரத்தம் உடலை விட்டு வெளியேறும் போது அதைப் பொருட்படுத்தாமல் தன் கணவனுக்காகவும் குடும்பத்திற்காகவும் ஓடியோடி உழைக்கிறாள். எத்தனைத் துன்பம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு மேலே வரும் வலிமை பெண்களுக்கே உண்டு. பட்டங்கள் ஆள்வதும சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் படைக்க வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கு இளைப்பாரில்லை கும்மியடி என்று பாரதியின் வாக்கிற்கேற்ப பெண்கள் நம் நாட்டின் கண்கள். பெண்களை மதிப்போம்.
வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று பெண்களைப் பார்த்துக் கூறுவதற்கு முன்பு ஒரு நாள் முழுவதும் அவர்கள் வேலையைச் செய்து பாருங்கள். மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையைக் கொளுத்துவோம். பெண்ணியம் போற்றுவோம். சகோதரியாய் தாயாய் மகளாய் தாரமாய் திகழும் மாதர் குல மாணிக்கங்களுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
English abstract
Allow us to have a good time Ladies on ladies’s day