இந்தியாவுக்கு பின்னடைவு?
மேலும், இந்த பிட்ச்களில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் போன்றவர்கள் தொடர்ந்து 150 வேகத்தில் பந்துகளை வீசுவார்கள் என்பதால், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை அதிகம் ஆடி பழக்கப்பட்ட இந்திய அணி படுமோசமாக திணற வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், தொடர்ந்து 150 வேகத்தில் பந்துவீசக் கூடிய ஆன்ரிக் நோர்க்கியா, காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.
நோர்க்கியாவுக்கு மாற்று:
இருப்பினும், ஏற்கனவே இருக்கும் 20 பேர் கொண்ட அணியில் நோர்க்கியாவுக்கான மாற்று வீரர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் டுவான் ஓலிவியர். மொத்தம் 10 போட்டிகளில் மட்டுமே, அதுவும் 2019ஆம் ஆண்டுவரைதான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக விளையாடியிருக்கிறார். சமீபத்தில் இவர், 4 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 11.14 சராசரியுடன் 28 விக்கெட்களை குவித்திருக்கிறார். பெஸ்ட் 9/95 ஆகும். நோர்க்கியா வேகத்திலும் பந்துவீசக் கூடியவர். இதனால்தான், நோர்க்கியாவுக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் ஓலிவியரை வைத்து சமாளிக்க அந்த அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஓலிவியர் பேட்டி:
இவருக்கு XI அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தற்போது, முதல் டெஸ்ட் குறித்து டுவான் ஓலிவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்த தொடர், எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடராக இருக்கும். இது ஒரு உற்சாகமான சவால். விராட் கோலிக்கு எதிராக பந்துவீசுவதுதான் மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், அதனை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “விராட் கோலி, உலக கிரிக்கெட்டின் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர். முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற்றுவிட்டால், இந்தியாவை அதன்பிறகு சமாளித்துவிடலாம் என நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க சூழல், எங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதனை பயன்படுத்தி நாங்கள் வெற்றிபெற தீவிரமாகப் போராடுவோம்” எனத் தெரிவித்தார்.