ishan dhoni

தோனி ஒருமுறை மேத்யூ ஹெய்டனை ஏதோ ஷார்ட் மிட் ஆஃபில் கொஞ்சம் நேராக நிறுத்தி ஆவேசமாக ஆடிய கிரன் பொலார்டை ஐபிஎல் போட்டியில் வீழ்த்தியதை ஏதோ இதுவரை கிரிக்கெட்டே கண்டிராத ஒரு கேப்டன்சி சாதுரிய முடிவு போல் விதந்தோதுவதுதான் மாடர்ன் மீடியா… இல்லை இல்லை போஸ்ட்-மாடர்ன் மீடியா.கிரிக்கெட் தொடங்கிய காலம் தொட்டே கேப்டன்கள் பலர் பற்பல விநோத, விசித்திர முடிவுகளை, சாதுரியமாக எடுத்திருப்பதை நிச்சயமாக தொகுத்தளிக்க முடியும். கிரிக்கெட் வரலாறு தெரியாமல்தான் நாம் சில விஷயங்களை தூக்கிப் பிடிக்கிறோம், தோனியின் இந்த பீல்டிங் அமைப்பு முறை பிரமாதம் தான் அதை மறுக்கவில்லை, ஆனால் இதுவரை யாரும் செய்யாதது போல் ஊடகங்கள் உருட்டுவதுதான் பிரச்சனையாக இருக்கிறது.

ஆனால் இதே தோனி தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் போட்டி ஒன்றில் புதிய பந்தை 80 ஓவர்கள் முடிவில் எடுக்காமல் பழைய பந்திலேயே சணற்கண்டு வெளியே வரும் வரை வீசச் செய்து 146 ஓவர்கள் வரை பழைய பந்திலேயே வீசச் செய்து பவுலர்களின் உழைப்பை வீணடித்தவர், வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தவர் என்பதை ஏன் யாரும் இதுவரை பேசுவதில்லை? அல்லது ஒருமுறை ஸ்பின்னருக்கு ஸ்டம்பிங் செய்ய வாகாக ஸ்டம்ப் அருகே நிற்காமல் தள்ளி நின்றார், ஏனென்று கேட்டால் பேட்ஸ்மென் அப்போதுதான் தைரியமாக இறங்கி அடித்து ஷாட்டை தவறாக அடித்து கேட்ச் ஆக வாய்ப்பிருக்கும் என்றார், என்ன ஒரு அபத்தவாதம்!

அருகில் பீல்டர்கள் இருந்தால்தான் ஒரு ஸ்பின்னர் பேட்டரை அச்சுறுத்த முடியும். எல்லாரையும் தள்ளி நிற்க வைத்து விட்டு விக்கெட் கீப்பர் தானும் தள்ளி நின்று கொண்டு ஸ்பின்னரை நிராயுதபாணியாக்கி விட்டு விக்கெட் விழும் என்று நம்புகிறார் என்றால் அது என்ன ஒரு அபத்தம்? நகைச்சுவை திலகம் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில், பிச்சைக்காரன் ஒருவன் ‘ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சுய்யா’ அப்டீன்னு ஏதாவது தர்மம் பண்ணுங்க என்ற தொனியில் கேட்பதை அப்படியே தன்மை நவிற்சிப் பொருளில் புரிந்து கொண்டு ‘அடடே! போய் முதல்ல சாப்ட்டு வாப்பா’-ன்னு சொல்வாரு. அதாவது சோறின்றி தவிப்பவர்கள் குறித்த நம் அன்றைய சமூகத்தின் தோல் தடித்த தன்மையைத்தான் இந்த நகைச்சுவை மூலம் என்.எஸ்.கே சாடினார், அதே போல்தான் ஸ்பின் பவுலரை நிராயுதபாணியாக்கி விட்டு ‘அடடே விக்கெட் விழும்பா’ என்கிறார் தோனி. இவற்றையெல்லாம் ஏன் ஒருவரும் பேசுவதில்லை என்பதே நம் கேள்வி.

ஆஸ்திரேலியா 47/4 என்று இருந்த போது மறுநாள் உமேஷ் யாதவ் பவுலிங்குக்கு ஸ்லிப் இல்லாமல் வீசியவர்தான் இந்த டெஸ்ட் கேப்டன் தோனி, பாண்டிங் இரட்டைச் சதம் விளாசினார். லார்ட்ஸில் கிரீன் டாப் பிட்சில் புவனேஷ்வர் குமார் பிரமாதமாக வீசினார், இஷாந்த் ஒரு அச்சுறுத்தல், ஆனால் முதல் நாள், பிரஷ் பிட்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு நேராக சுரேஷ் ரெய்னாவை பந்து வீச அழைத்ததை என்னவென்று கூறுவது? ஏன் இவற்றைப் பேசுவதில்லை?

இன்னொரு புறம், தென் ஆப்பிரிக்காவின் ஹான்சி குரோனியேவை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ், தானே பந்து வீச வந்தார், ஆனால் உத்தி என்னவென்றால் குரோனியேவை ரன் அவுட் செய்வது, ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த பாண்டிங்கை லேசாக மிட் விக்கெட் பக்கம் நகர வைத்தார், லேசாக, பிறகு ஒரு பந்தை லெக் ஸ்டம்பில் வீசினார், பிளிக் செய்து ஸ்கொயர் லெக் காலியாகத்தானே இருக்கிறது என்று ரன்னுக்காக நகர்ந்தார் குரோனியே, பாண்டிங் அதற்குள் பந்தை எடுத்து ஸ்ட்ரெய்ட் ஹிட், குரோனியே ரன் அவுட். அதாவது ரன் அவுட்டுக்கு ஸ்ட்ராடஜி போட்டவர்களெல்லாம் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ இப்படி கூற முடியும்.

தோனி என்றில்லை இப்போது கோலியையும் இப்படித்தான் விசிறி விட்டனர். இவையெல்லாம் தொன்று தொட்டு கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதுதான், டான் பிராட்மேனை வீழ்த்த எதிரணியினர் போட்ட திட்டங்களும், அவர் அதை முறியடித்ததையும் தனி புத்தகமாகவே எழுத முடியும். நிற்க.

இப்போது தோனி செய்தது ஒன்றைப் பற்றி இஷான் கிஷன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விதந்தோதியுள்ளர்.  தோனி செய்தது ஒன்று… இஷான் கிஷன் ஷாட்டை சரியாக ஆடாமல் விக்கெட்டை கொடுத்தது வேறொன்று, ஆனால் இதை தோனியின் கேப்டன்சி திறமையாக இப்போது வந்து இஷான் கிஷன் விதந்தோத வேண்டிய அவசியமென்ன என்பதே நம் கேள்வி.

அவர் இவ்வாறு கூறுகிறார், “எம்.எஸ்.தோனியின் கீப்பிங் திறமையை விட, நான் அவரது மூளை எப்படி இயங்குகிறது என்பதை அறிய விரும்புகிறேன். ஒரு போட்டியில், நான் நன்றாக விளையாடி கொண்டிருந்தேன். அனைத்து பவுலர்களையும் நன்றாக எதிர்கொண்டு ரன்களை அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது டோனி, பந்துவீச வந்த இம்ரான் தாஹிரிடம் சென்று பேசினார். அவர் என்ன பேசினார் என்று யோசிக்கும்போது எனக்கு இன்னுமும் ஆச்சரியமாக இருக்கிறது

இம்ரான் தாஹிர், எனக்கு ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீசினார். நான் அதை டிரைவ் அடிக்க முயன்ற போது, ஷார்ட் தேர்ட் மேன் பீல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனேன்.

ஒரு ஸ்பின்னரை டிரைவ் செய்ய முயலும் பேட்ஸ்மேன் எப்படி ஷார்ட் தேர்ட் மேனில் சிக்கினார் என்பதை இன்னுமும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை தோனி சரியாக கணித்தார்” என்று கூறியுள்ளார்.

அவர் தாஹீரிடம் என்னவோ சொல்லியிருக்கிறார், இவர் ஷாட்டை தவறாக ஆடியுள்ளார், ஹாஃப் வாலி பந்து தேர்ட் மேனில் கேட்ச் ஆனது தன்னுடைய தவறு என்பதை இஷான் கிஷன் உணரவில்லை மாறாக தோனியின் கேப்டன்சி சாதுரியத்தின் தருணமாக மாற்றுகிறார். இப்படி தோனி தோனி, கோலி கோலி, ரோஹித் ரோஹித் என்றெல்லாம் பேசுவது கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட பிராண்ட் கட்டுமானத்திற்கான பேச்சுக்களே.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.