நடராஜன் இந்த ஐபிஎல் சீசனை நன்றாகத் தொடங்கியுள்ளார், இந்த ஃபார்மைத் அவர் இப்படியே தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 2020 ஐபிஎல்லுக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் அறிமுகமானார். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் இந்திய அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடினார். அதன்பிறகு அவர் தனது உடற்தகுதிக்காக போராடி, மீண்டும் வந்து கடந்த ஐபிஎல் போட்டியில், முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
சாம் கரன் பேட்டி:
இதுகுறித்து பேசிய சாம் கரன், “கடந்த ஆண்டு புனேவில் அவருக்கு எதிராக விளையாடினேன். நான் ஸ்ட்ரைகில் இருந்த போது, அவர் என்னை வைத்து 13 ரன்களை டிஃபெண்ட் செய்தார். அவருடைய யார்க்கர்களை நான் விளையாடி இருக்கிறேன். அவர் மிகவும் திறமையானவர். தொடர்ந்து ஆறு யார்க்கர்களை வீசக்கூடிய பந்துவீச்சாளர்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெரும்பாலான அணிகள் தங்கள் அணியில் அவர் விளையாடுவதை விரும்புவர். இடது கை பந்துவீச்சாளரான இவர், வித்தியாசமான கோணத்தில் பந்துவீசக்கூடியவர். மேலும் கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்கிறார். க்ருனல் பாண்டியாவிற்கு அவர் வீசிய பந்து லெக் ஸ்டம்பை பிடுங்கியது. அவர் ஒரு கிளாஸ் பெர்ஃபார்மராக இருப்பதால், ஐபிஎல்லில் அவர் உடல் தகுதியுடன் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
சாம் கரன் இந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.