‘நெற்றிக்கண்’: நயன்தாராவின் ஒன்வுமன் ஷோ
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்
சிபிஐ அதிகாரியான நயன்தாரா தனது சகோதரர் தவறான வழியில் சென்றுவிட கூடாது என கண்டிக்கிறார். அவ்வாறு ஒரு சமயத்தில் சகோதரரை ’பப்’இல் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் வழியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சகோதரர் உயிரிழந்துவிட நயன்தாராவுக்கும் கண் பார்வை பறி போகிறது
இந்த நிலையில் பெண் ஒருவரால் பாதிக்கப்பட்ட வில்லன் அஜ்மல், அந்த கோபத்தில் இளம்பெண்களை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக சித்திரவதை செய்கிறார். அந்த வகையில் எதிர்பாராத வகையில் நயன்தாராவை சந்திக்கும் அஜ்மல், நயன்தாராவையும் கடத்த முயற்சி செய்கிறார். ஆனால் நயன்தாராவுக்கு கண் தெரியாவிட்டாலும் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார். இந்தநிலையில் எப்படியும் நயன்தாராவை அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அஜ்மலும், அஜ்மலிடம் சிக்கிய பெண்களை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நயன்தாராவும் ஈடுபட இருவரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்பம் முதல் கடைசி வரை கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளிலும் வருகிறார். ஒன்வுமன் ஷோவாக இந்த படத்தின் கதையை தனது தோளில் சுமந்து எடுத்துச் சொல்கிறார் என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய பலம். கண் தெரியாதவராக இருந்தாலும் புத்திசாலித்தனமாக செயல்படும் வகையில் அவரது கேரக்டர் நம்பும்படி உருவாக்கபட்டுள்ளது. அதற்கேற்றவாறு உண்மையாகவே கண் தெரியாத ஒருவர் போன்றே மிக அபாரமாக நயன்தாரா நடித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுன் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பாணி, சரண் சக்தி கொடுக்கும் தகவல்களிலிருந்து குற்றவாளியை அடையாளம் காணுவது என நயன்தாரா இந்த படத்தில் அசத்தி உள்ளார் என்று கூறலாம். ’பயம்தான் நம்மிடம் உள்ள ஒரே பலவீனம். அதை வைத்து தான் ஏறி மிதிச்சுகிட்டு போய்கிட்டே இருக்காங்க’ உள்பட பல வசனங்களை நயன்தாரா பேசும் காட்சிகள் அருமை
நயன்தாராவை அடுத்து அஜ்மல் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிகச்சரியாக செய்துள்ளார். நயன்தாராவை பார்த்ததும் ஏன் அவரை அடைய வேண்டும் என்பதற்கு அவர் கூறும் பிளாஸ்பேக் நம்பும்படி இல்லை.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் நடித்த சரண்சக்தி, இந்த படத்தில் கொஞ்சம் பெரிய கேரக்டரை ஏற்று, அந்த கேரக்டரின் பொறுப்பை உணர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக நயன் தாரா மெட்ரோ ரயிலில் செல்லும்போது அவருக்கு சரண்சக்தி தகவல் காட்சி சூப்பர். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கேரக்டரில் நடித்தவரும் ஓகே ரகம்.
இயக்குனர் மிலிந்த் ராவ், சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார். ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை அஜ்மல் போலீசில் பிடிபட்ட உடன் திடீரென தொய்வடைகிறது. மிகப்பெரிய அதிகாரிகள் முன் விசாரணையில் இருக்கும் ஒரு குற்றவாளி, அவ்வளவு தெனாவட்டாக பேசுவது நடைமுறையில் சாத்தியமா? என்பதை இயக்குனர் யோசித்தாரா? என்று தெரியவில்லை. போலீஸ் அதிகாரிகள் முன்பே ‘நான் உன்னை கொலை செய்வேன் என்று அஜ்மல் கூறும்போது அனைத்து போலீஸ் உயரதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பது நம்பும்படி இல்லை. அதுமட்டுமின்றி பெண்களை கடத்திய குற்றத்தை செய்த ஒரு பெரிய குற்றவாளியை ஒரு சாதாரண ஜெயிலில் பாதுகாப்பு இல்லாமல் அடைத்து வைத்திருப்பதிலும் லாஜிக் இடிக்கிறது. மேலும் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படத்திலும் வருவது போல், கிளைமாக்சில் எல்லாம் முடிந்த பிறகு போலீஸ் வருவதும் இந்த படத்தின் மைனஸ் ஆக கருதப்படுகிறது
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் இரண்டு பாடல்கள் கேட்பதற்கு இதமாக உள்ளது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் மிக அருமை. பல காட்சிகள் இருட்டில் இருந்தாலும் பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைத்துள்ளா. மொத்தத்தில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு ஒரு நல்ல த்ரில் ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி இருக்கும் என்பது நிச்சயம்.
நயன்தாராவுக்காக ஒருமுறை பார்க்கலாம்