தங்கள் நாட்டுக்கு ஆட வரும் அணிகளுக்கெல்லாம் குழிப்பிட்ச் பிரசாதம் அளித்து அவர்களை குழியில் தள்ளி வெற்றி காணும் இந்த அணி பற்றி எந்த ஐசிசியிடம் புகார் அளிப்பது?
எப்போதும் தோற்றுப் போனால் இது போன்று அழுவது வங்கதேசத்துக்கு மிக சகஜமானதே. 2015 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா அவுட் ஆன பந்துக்கு நடுவர் நோ-பால் கொடுத்து விட்டார் என்று பெரிதாக ஒப்பாரி போட்ட வங்கதேசம், பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்து, பிசிசிஐ-யின் கைக்கூலி ஐசிசி என்று கூறும் அளவுக்கு கடுமையான ஒப்பாரியைப் போட்டது. அதே வேளையில் அந்த அணி வெற்றி பெற்று விட்டால் செய்யும் அட்டகாசம் தாங்காது, எதிரணியை இழிவு படுத்துமாறு ‘நாகின் டான்ஸ்’ ஆடுவது, அந்த அணியைப் பற்றி ஊடகங்களில் கார்ட்டூன் வரைவது என்று செலம்பல் ஜாஸ்தியாக இருக்கும்.
ஒருமுறை தோனி கேப்டன்சியில் அங்கு போய் தோற்று விட்டு வந்தது இந்தியா, தோனி தலைமை இந்திய அணியை கேலிச்சித்திரப்படுத்தி உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டன. ஜெயித்தால் இப்படி, தோற்றால் ஒப்பாரி என்பது வங்கதேச அணியின் வழக்கம்.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஜலால் யூனுஸின் ஒப்பாரியைக் கேட்போம்:
ஒருநாள் தொடர் முடிந்தவுடனேயே நடுவர்கள் செயல்பாடு பற்றி ஒரு புகார் கொடுத்துள்ளோம். ஆட்ட நாடுவர் ஆண்டி பைகிராப்ட் எங்கள் வீரர் நபீஸ் இக்பாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்போது டெஸ்ட் மேட்ச் முடிந்துள்ளது, அது பற்றியும் நடுவர் தீர்ப்புகள் பற்றியும் இன்னொரு புகார் அளிக்கவிருக்கிறோம். ” என்றார்.
டீன் எல்கருக்கு நாட் அவுட் கொடுத்தனர். ரிவியூ செய்தால் அவர் அம்பயர்ஸ்கால் என்று தப்பினார். அதே போல் இன்னொரு தொடக்க வீரர் சரேல் எர்விக்கு நாட் அவுட் கொடுத்தனர், ஆனால் வங்கதேசம் ரிவியூ செய்து தீர்ப்பை மாற்றினர். கீகன் பீட்டர்சனுக்கும் ஒரு எல்.பி. மறுக்கப்பட்டது. பங்களாதேஷ் ரிவியூ தீர்ந்து விடும் என்று பயந்து ரிவியூ எடுக்கவில்லை, ஆனால் அது அவுட் என்று வங்கதேச அணி வீரர்களும் வாரியமும் குற்றம் சாட்டியுள்ளது.
இதோடு வங்கதேசம் வைத்த இன்னொரு குற்றச்சாட்டு தமாஷ் தான். முதல் நாள் ஆட்டம் சைட் ஸ்க்ரீன் பிரச்சினையினால் அரைமணி தாமதமானது, அது உண்மையான பிரச்சனை, தென் ஆப்பிரிக்கா வாரியமெல்லாம் ஏழை வாரியம் வசதி குறைவுதான். பிறகு இழந்த அரைமணியை உணவு இடைவேளையை அரைமணி தள்ளிப்போடுவதன் மூலம் சரி கட்டியது, உடனே, ‘டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நேர பிட்சின் சாதகத்தை இழந்து விட்டோம்’ என்று விசித்திரமாகப் புலம்புகிறது. என்னவோ அரைமணி நேரத்தில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி விடுவது போல்.
இரு அணிகளும் ஒப்புக் கொண்ட பிறகுதானே டெஸ்ட் தொடக்கத்தை ஒத்தி வைக்க முடியும்? இதே ஜெயித்திருந்தால் இதெல்லாம் ஒரு புகாராகவே இருக்காது, தோற்றவுடன் அவன் என்ன குட்டிட்டான், கிள்ளிட்டான் வகையறா புகார்கள் ஆகும் இது, ஸ்லெட்ஜிங்கைப் பொறுத்தவரை இரு அணிகளுமே மாறி மாறி ஸ்லெட்ஜ் செய்து கொண்டனர், இதில் இவர்கள் மட்டும் ஒப்பாரி வைப்பது ஏன் என்று கேட்கிறது தென் ஆப்பிரிக்க தரப்பு.
மொத்தத்தில் வங்கதேசத்துக்கு எப்போதுமே ஒரு இரட்டை நிலைப்பாடு உண்டு. வென்றால் ஒரு காட்டுத்தனமான, தோற்ற அணியை இழிவு படுத்தும் குணம், தோற்றால் அழுது புலம்பி புரள்வது. சர்வதேச கிரிக்கெட் அணி ஒன்று இப்படி நடந்து கொள்வது வேடிக்கைதான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.