ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக சூர்யாவின் தி. நகர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பீம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெயம்பீம் படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர். அதே சமயம் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யாவை அடித்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தார். மேலும் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி ரூ. 5 கோடி கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதரவு

சூர்யாவுக்கு மிரட்டல்கள் வருவதை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் மிரட்டல் அதிகரிப்பதால் தி. நகரில் இருக்கும் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய 5 போலீசார் சூர்யா வீட்டை பாதுகாத்து வருகிறார்கள்.

பாமக

ஜெய்பீம் படம் தொடர்பாக தன்னிடம் கேள்வி கேட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார் சூர்யா. இந்நிலையில் சூர்யாவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி அம்மாள்

நிஜத்தில் இறந்த ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதி அம்மாள் பெயரில் வங்கியில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவித்தார். ஆனால் சூர்யா தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், சந்தித்து பேசவும் இல்லை என்றும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார் பார்வதி அம்மாள்.