சுவிஸ் ஓப்பன் பாட்மிண்டன் தொடரில் பங்கேற்று விளையாடிய இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக்குப் பலரது மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தொடர்ந்து 2 முறை பதக்கம் வென்ற வீராங்கனை எனும் வரிசையில் உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் பாஸல் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓப்பன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடிய பி.வி.சிந்து தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மேலும் சுவிஸ் பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை அவர் இரண்டாவது முறையாக வென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
சுவிஸ் ஓப்பன் தொடருக்கான இறுதிப்போட்டியில் தாய்லாந்து நாட்டின் பூசனன் ஓங்பாம்ருங்பனை என்பவரை எதிர்கொண்ட பி.வி.சிந்து 49 நிமிடங்கள் அவருடன் விளையாடி 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற வீராங்கனையாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.
அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டு அவருடன் 48 நிமிடங்கள் விளையாடி 12-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.