என் அப்பா…
அப்பா!
அழைக்கும் எனக்கு
அரை மணி நேரம் செவி கொடு!
என் ஆன்மாவின் அங்கத்தை
உன்னோடு அலச ஆசைப்படுகிறேன்.
அப்பா!
நீ இருக்குமிடம் வெறுமையானதால்
என்னால் என்னவெல்லாம்
செய்யமுடியவில்லை தெரியுமா?
விகடன் பத்திரிக்கை படிக்கையில் – எனக்கு
விருப்பமான பக்கத்தை உன்னிடம் சொல்லி
வியக்க முடியவில்லை.
மனதிற்குள்ளேயே இருந்துவிடுகிறது மண்ணாக…
என் மடிக்கணினியில் இடம்பிடிக்கும்
என் மனம்கவர்ந்த புகைப்படத்தை
என் மனதோடு மனதாக
உன்னிடம் காட்டமுடியவில்லை.
உள்ளுக்குள்ளே உடைந்த
எண்ணங்களோடு
கலந்துவிடுகிறது…
மழை பெய்யும் போது
மாடியில் நின்று கொண்டு
மனதோடு சேர்ந்து உடலையும்
உன்னோடு ஒன்றாக நின்று
நனைக்க முடியாததால்
நகன்று கொள்கிறேன்.
மழைதுளியோடு சேர்த்து
கண்ணீர் துளிகளையும்
கலந்து விடுகிறேன்.
உன் கண்களைத்தானே
நான் உலக அதிசயம் என்று சொல்லி
தினமும் வியந்தேன்.
தினமும் உன் கண்களை கண்டதாலோ என்னவோ
உன்னை விட்டு வேறு எங்கும் தொலைவில்
செல்ல மனமில்லாமல் இருந்தேன்.
பள்ளிச் சுற்றுலாவிற்க்குக் கூட
சென்றதில்லை
அப்படி உன்னை உலக அதிசயமாய்
நினைத்தவளை
ஒரே அடியாக பிரிந்து போக
எத்தனை நாள்
கற்பனை செய்தாய்?
நீ என்னை விட்டு பிரிந்து போனதை
இத்தனை நாள்
நான் கனவென்று தான் நினைத்தேன்.
ஆனால் இன்று தான் புரிந்தது.
“அனாதை” என்ற வார்த்தை கேட்கும் பொழுது…
அடிமனதில் உன்னை
”அப்பா” என்று வைத்திருந்த என்னை
ஆயுள் முழுக்க அழவைத்தாய் ஏன்?
உன்னோடு சென்று
கடற்கரையைக் காணத்தானே
விரும்பினேன்.
உன்னையே சென்று
கடலில் காண வைத்து விட்டாயே
கடல் அலையில் கரைந்துள்ள அஸ்தியாய்.
இப்போதெல்லாம்
அஸ்தி கரைத்த கடலைக் காணவிரும்பவில்லை
நீ இல்லாமல்.
நீ விட்டுசென்ற ஆஸ்தி தேவைப்படவில்லை
நீ இல்லாமல்.
நீ மட்டும்தான் தேவைப்படுகிறாய்
நான் உயிர்பிழைக்க
என் உடலின் உயிராக…
வெளிப்படுத்த முடியாத அளவு உணர்ச்சிகள்
கட்டுங்கடங்காத அளவு கண்ணீர்துளிகள்
மனம் ரணத்தையும் தாண்டி பிணமானது.
என்றுமே புன்னகை மட்டும் சிந்திய
என் அன்புத்தோழியிடத்தில்
அளவுக்கு அதிகமாய் இன்று அழுகை.
மனதிற்க்கு வேலி கூட போடமுடியாத இடத்தில்
வேள்வி வளர்த்து
விதவை ஆனது மனது.
கட்டாந்தரை உறக்கம்கூட
கண்ணீரோடு உருகுகின்ற இரவுகளானது.
கண்மூடும் கனவெல்லாம்
கனமான இதயம் மனம் விட்டுப்போனது.
சிறு வயதில் எல்லாம்
விடிந்தால் ஊருக்குப் போகிறோம் என்றால்
அந்த இரவுகளெல்லாம்
கனவுக்கம்பலைகளை
போற்றிக்கொண்டு
கற்பனைக் கட்டிலில்
அப்பாவைக் கட்டிபிடித்தபடி தான்
இருக்கும் எனக்கு.
இப்போதெல்லாம் தினமும்
இரவுகள்
தின்ற நினைவுகளை
திருப்பி வெளிப்படுத்துகிறது.
அப்பா என்ற வார்த்தையை
கேட்டவுடனே
கட்டுங்கடங்காத கண்ணீர்…
என் உணர்ச்சிகளை
எப்படி வெளிப்படுத்துவதென்று
தெரியவில்லை.
கண்ணீர்துளிகள் மட்டுமே
காலத்தோடும் நேரத்தோடும்…