டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இம்மசோதா லோக்சபாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பல கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படும்; மத்திய அரசு உள்நோக்கத்துடன் இச்சட்டத்தை கொண்டுவருகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர். இருந்த போது மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது.
ராஜ்யசபாவில் இன்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்யசபாவிலும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே ராஜ்யசபாவிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.