India
bbc-BBC Tamil
இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ்.
இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை பிபிசி தமிழ் மேற்கொண்ட பயணத்தின்போது களத்தில் உள்ள நிலவரத்தை இங்கே பதிவு செய்கிறோம்.
தலைநகர் டெல்லியில் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் என்பது, பொது இடங்களில் முக கவசம் அணிவதை தீவிரமாக பின்பற்றும் முயற்சியாக உள்ளூர் நிர்வாகம் கருதுகிறது. ஆனால், முக்கிய சந்திப்புகள் நீங்கலாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகள், உள்ளூர் கடைகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.
டெல்லியை இணைக்கும் அண்டை மாநில எல்லைகளான உத்தர பிரதேசத்தின் நொய்டா, காஜியாபாத், ஹரியாணாவின் குருகிராம், ஃபரிதாபாத் ஆகியவற்றில் டெல்லியை இணைக்கும் எல்லை புறச்சாவடிகளில் சிவில் பாதுகாப்பு குழுவினர் மூலம் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகள் அல்லது வாகனங்களில் பயணம் செய்வோரின் படங்கள் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த எல்லை நகரங்களிலும் உள்ளூர் மக்கள் தங்கு, தடையின்றி முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது.
உத்தர பிரதேசத்தின் மதுராவிலும் இதே நிலையை நீடிக்கிறது. அங்குள்ள மதுராவின் புகழ்பெற்ற கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலில் வெளியில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்லும்போது மட்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. ஆனால், அங்கும் மக்கள் நெரில் நிறைந்த கடை வீதிகள், முக்கிய சந்திப்புகளில் முக கவசமின்றி மக்கள் நடமாடுவதை பார்க்க முடிகிறது.
உத்தர பிரதேசத்தின் மதுராவில் இருந்து 600 கி.மீ தூரத்தில் மத்திய பிரதேச தலைநகரான போபால் உள்ளது. அங்கும் இதே நிலைதான். முக்கிய வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிகள் என்பது முக கவசம் அணிவதில் மட்டுமே உள்ளது. பல பொது சந்திப்புகளிலும் சுற்றுலா தலங்களிலும் கை சுத்திகரிப்பான்கள் என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாக காணப்படுகிறது.
போபாலில் இருந்து 860 கி.மீ தூரத்தில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் உள்ளது. அங்கு முக்கிய சுற்றுலா தலங்களில் மட்டுமே கொரோனா வழிகாட்டுதல்கள், முக கவசம் அணிவதன் மூலம் கட்டுப்படுத்த முனைப்பு காட்டப்படுகிறது. ஆனால், அவை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமல் கூட்டமாக உள்ளனர். அங்கு முன் கள பணியாளர்களான காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள் கூட முக கவசம் அணியாமலேயே களப்பணியில் உள்ளனர்.
எனினும், ஆறுதல் தரும் வகையில் தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தை இணைக்கும் மாநில எல்லைகளில் காவல்துறையினர் முக கவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நகரம் வழியாக பயணம் செய்தபோது அங்கு மக்கள் முக கவசம் அணிந்து பரவலாக இருப்பதை பார்க்க முடிந்தது. அதன் பிறகு தமிழகத்தின் எல்லை நகரான ஓசூருக்குள் நுழைந்தபோது எல்லை காவல் கண்காணிப்புப் பணியில் இருந்தவர்கள் மட்டுமே முக கவசம் அணிந்திருந்தனர். ஆனால், அந்த வழியாக வந்த வாகனங்களில் இருந்தவர்கள், சாலையில் நடப்பவர்கள் என பலரும் முக கவசமின்றி எப்போதும் போல இயல்பாகவே நடமாடினர். அவர்களை காவல்துறை தரப்பு தடுத்து நிறுத்தவோ முக கவசம் அணியுமாறு கட்டுப்படுத்தவோ இல்லை.
ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல் என நாம் பயணம் செய்த தமிழக மாவட்டங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் இதே நிலையே காணப்பட்டது. சேலத்தின் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் என்பது எழுத்தளவில் மட்டுமே இருந்தன. கொரோனா என்பது அங்கெல்லாம் வந்து போய் வழக்கொழிந்து போன ஒரு வைரஸ் போலவே உள்ளூர் மக்களும் சுற்றுலா விடுதிகளை நடத்துவோரும் நடந்து கொள்வதை பார்க்க முடிந்தது.
ஏற்காடு முதல் மதுரை செல்வதற்காக நாம் பயன்படுத்திய சேலம், நாமக்கல், கரூர் சாலைகளிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை. இங்குள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் முக கவசம் அணிவது அறிவுறுத்தப்படவில்லை.
மதுரையில் முக்கிய வழிபாட்டுத்தலமான மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிப்புறத்தில் மட்டுமே முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், அங்குள்ள கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தபோதும் அங்கு கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மதுரையின் பிற உணவு விடுதிகள், சுற்றுலா தலங்களிலும் இதே நிலையே நீடித்தது.
மதுரையில் இருந்து திருவெல்வேலி சென்றபோது, அந்த நகரம் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வழிகாட்டுதல் நெறிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பகுதி போல காட்சியளித்தது. இங்கும் எந்தவொரு சுற்றுலா தலங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் முக கவசம் அணிய வலியுறுத்தப்படவில்லை. வெளியூர் பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் கொரோனா வழிகாட்டுதல்கள் நெறிகளுக்கு உட்பட்டுள்ளார்களா என்ற ஆய்வு நடத்தப்படவில்லை. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற நாம், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு சென்றோம். இந்த இரு முக்கிய பகுதிகளிலும் கொரோனா வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்க விடப்பட்ட ஒன்றாகவே தென்பட்டது.
இத்தனைக்கும் கன்னியாகுமரிக்கும் கேரள மாநில எல்லை பகுதிக்கும் இடையிலான தூரம் 60 கி.மீ மட்டுமே. அந்த மாநிலத்தில் கொரோனா தற்காப்பு வழிகாட்டுதல்கள், எல்லையோர கண்காணிப்பு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் காலை சூரியோதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய நிகழ்வுகளை காண கடற்கரையில் மக்கள் கூட்டம் இப்போதும் அலைமோதுகிறது. ஆனால், அந்த கூட்டத்தில் கூட முக கவசம் அணிவோரை விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே மக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள். அரசு தரப்பில் முக கவசம் அணிவது இங்கும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
கன்னியாகுமரியில் இருந்து மீண்டும் மதுரை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னையை அடைந்தபோதும் அங்கும் கொரோனா வழிகாட்டுதல்களின்படி முக கவசம் அணிவது பெரிதாக அமலில் இல்லை என்பதை காண முடிந்தது. மிகப்பெரிய வணிக வளாகங்கள், அங்காடிகளிலும் அது வலியுறுத்தப்படவில்லை. சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டம், தெலங்கானாவின் ஹைதராபாத், நிஜாமாபாத், உத்தர பிரதேசத்தின் ஜான்சி, மத்திய பிரதேசத்தின் குவாலியர், மீண்டும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா வழியாக நொய்டாவை அடைந்தபோதுதான் அங்குள்ள காவல்துறையினர் எல்லையில் முக கவசம் அணிந்தபடி ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி முக கவசம் அணியுமாறு எச்சரித்து அனுப்பியதை பார்க்க முடிந்தது. நொய்டாவை கடந்து டெல்லிக்குள் நுழைந்தபோதும் எல்லையில் ஒரு சில சந்திப்புகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், முக கவசம் அணியாத வாகனங்களில் இருந்தவர்களையும் அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்டு வரும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் ஜே. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது முந்தைய கொரோனா பரவலின்போது நடக்கப்பட்ட அதே துரித நடவடிக்கை தற்போதும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் சரி, ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலும் சரி மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் திறம்பட செயலாற்றி வருகிறது. ஒமிக்ரான் திரிபு தடுப்பு நடவடிக்கையிலும் இப்போதே மாவட்ட நிர்வாகங்கள் தயார்நிலையில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எந்த வாய்ப்புக்கும் இடம் கொடுக்காமல் கொரோனா பரவல் காலத்தில் மேற்கொண்ட அதே அக்கறையையும் துரித நடவடிக்கையையும் இப்போதும் காட்டுவோம்.” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று விட்டு மீண்டும் வடக்கு நோக்கி வந்ததுவரை இப்படித்தான் கள நிலைமை உள்ளது. நாம் குறிப்பிட்ட நகரங்களில் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமையை பார்த்த பிறகே அடுத்த நகருக்கு நாம் புறப்பட்டோம்.
இந்தியாவில் இன்றைய (டிசம்பர் 20) நிலவரப்படி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இப்போதுவரை நான்கு லட்சத்து எழுபத்து ஏழு ஆயிரத்து 554 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய அளவில் 6,563 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவேயில்லை என்று நாடாளுமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன்பு இந்திய அரசு அறிவித்தது.
https://twitter.com/ANI/status/1465573131045666820
ஆனால், அடுத்த இரண்டு வாரங்களிலேயே நாட்டில் 150க்கும் அதிகமான ஒமிக்ரான் வைரஸ் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டதாக அரசு கூறியிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்பு மாநிலங்களவையில் ஒமிக்ரான் திரிபு இந்தியாவிலேயே இல்லை என்று கூறிய அதே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாதான் இன்று அதே மாநிலங்களவையில் ஒமிக்ரான் திரிபில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பூஸ்டர் தடுப்பூசியே சிறந்த வழி என்று கூறியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அளவை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலவிய பாதிப்புடன் ஒப்பிட்டு, பாதிப்பு அளவு மிகவும் சொற்பம் என்று இந்திய சுகாதாரத்துறை கூறி வருகிறது.
ஆனால், இந்த பாதிப்பு எண்ணிக்கை அளவை வைத்து எடை போடக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக டெல்லியில் பதிவாகி வரும் ஒமிக்ரான் திரிபு பாதிப்பு உணர்த்துகிறது.
தலைநகர் டெல்லியில் இன்று பதிவான மேலும் இரண்டு ஒமிக்ரான் திரிபு பாதிப்புடன் சேர்த்து இங்கு மட்டும் அந்தத் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகியிருக்கிறது.
ஒமிக்ரான் நிலவரம் தொடர்பாக டெல்லி அமைச்சரவையில் இன்று விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அளவுக்கு ஒமிக்ரான் திரிபு அதிக வீரியமாக இருக்காது என நிபுணர்கள் கூறியதை கவனத்தில் கொண்டுள்ள அதேசமயம், வைரஸ் பரவலை தடுக்க வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதை மக்கள் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார்.
https://twitter.com/ArvindKejriwal/status/1472845432191524874
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று பதிவான நான்கு பாதிப்புகளுடன் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆகியிருக்கிறது. பிரிட்டனில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த 17 வயது ஒமிக்ரான் நோயாளியின் தாய், தந்தை மற்றும் பாட்டிக்கும் அந்த வைரஸ் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் திரிபால் நிலைமை மோசமடைவதால் யாரும் பீதியடைய வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இருந்தாலும், டெல்லியில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 107 ஆகியிருக்கிறது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒரே நாளில் பதிவாகாத அளவை விட அதிகம் என்பதை தரவுகள் காட்டுகின்றன.
இந்தியாவிலேயே ஒமிக்ரான் திரிபால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று பதிவான 6 புதிய பாதிப்புடன் சேர்த்து இதுவரை 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 8 ஒமிக்ரான் திரிபு பாதிப்புடன் சேர்த்து மாநிலத்தில் 20 பேருக்கு அந்த திரிபின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புதிய ஒமிக்ரான் திரிபால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தம் 19 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/ANI/status/1472749388954947585
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடையும்போதெல்லாம் அரசுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை விடுத்தது. கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடையும் முன்பாக நாடு முழுவதும் பொது முடக்கத்தை தளர்த்தாமல் தீவிரமாக அமல்படுத்த அந்த அமைப்பு வலியுறுத்தியது. ஆனால், இந்திய அரசு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுத்தது.
இப்போது 19ஆம் கட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் ஒமிக்ரான் திரிபு பரவல் பற்றி மீண்டும் இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்திருக்கிறது.
இது மட்டுமின்றி, இந்தியாவில் 12 வயது முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்று ஐஎம்ஏ கோரியிருக்கிறது.
“ஓமிக்ரான் பாதிப்பு இனி வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாகத் தெரிகிறது. நாம் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்தியாவில் மிகப்பெரிய மூன்றாவது அலை உருவாகலாம்,” என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
மற்ற நாடுகள் எதிர்கொண்ட அனுபவத்தின் மூலம், ஒமிக்ரான் திரிபு அதிகமாக ஊடுருவக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதும் அது அதிகமான மக்களை பாதிக்கும் என்பதும் தெளிவாகிறது என்று ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.
“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு கூடுதல் டோஸ் (தடுப்பூசி) வழங்கப்படுவதை அதிகாரபூர்வமாக அறிவிக்குமாறும் இந்திய அரசை ஐஎம்ஏ கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், இது தொடர்பாக அரசு இதுவரை எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கூட 33 புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,598 ஆக உள்ளது. லடாக்கில் 28 பாதிப்புகள் உள்ளன.
கடந்த ஜூலை மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேசிய தொற்று நோயியல் தடுப்பு நிறுவனமும் இணைந்து நடத்திய கணக்கெடுப்பின்படி, வெளிப்பகுதிகளில் குடிசை அல்லாத பகுதிகளில் முக கவசம் அணிவது 48 சதவீதமாகவும், குடிசை அல்லாத பகுதிகளில் அது 40 சதவீதமாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டது.
தீபாவளிக்கு முன்பே முக கவசம் அணியும் வழக்கத்தை மக்கள் குறைக்கத் தொடங்கி விட்டதாகவும் நிபுணர்கள் எச்சரித்தனர்.
தமிழக சுகாதாரத்துறையின் மூத்த உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குழந்தைசாமி, “வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடுமையான நோய்த்தொற்றைக் கொண்ட தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடையே கடுமையான நோய் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகமாக இருக்கலாம்,” என்று கூறுகிறார்.
முக கவசம் அணியும் பழக்கம் பொதுமக்களிடையே குறைந்து வருவதாக மூத்த பொது சுகாதார அதிகாரி ஒருவரும் ஒப்புக் கொண்டார். கொரோனா புதிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் இந்த நேரத்தில் முக கவசத்தை தொடர்ந்து அணிந்தால் மட்டுமே அதன் தீவிர தன்மையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
மக்கள் முக கவசத்தை அணிவதை தொடரச் செய்யும் ஆய்வு அல்லது மதிப்பீடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழக அரசு கடைசியாக கடந்த 15ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதாக கூறியிருக்கிறது.
அதன்படி முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை உறுதிப்படுத்துதல் போன்றவை அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கும். ஆனால், பல மாவட்டங்களில் அந்த வழிகாட்டுதல்கள் எழுத்தளவில் இருப்பதை மட்டுமே நம்மால் காண முடிந்தது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு இந்திய அரசு அறிவித்த முழு பொது முடக்கம் 21 நாட்கள் நீடித்தது. அதற்கு முன்னதாக, தன்னார்வ அடிப்படையில் மக்கள் தாங்களாகவே வீடுகளுக்குள்ளேயே இருக்கும் அறிவுறுத்தலை இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்தார்.
ஆனாலும், அரசு அறிவித்த 21 நாட்கள் முழு முடக்கத்துக்குப் பிறகும் நாட்டின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. இதனால், ஒவ்வொரு மாதமும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டது. அதை அமல்படுத்தும் துறைகளாக மத்திய உள்துறையும் மத்திய சுகாதாரத்துறையும் இருந்தன. இந்த இரு அமைச்சகங்களும் அவ்வப்போது விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல் நெறிகளை அமல்படுத்தி வருகின்றன.
கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்து அரசு செயல்படுத்தி பொது முடக்க கட்டுப்பாடுகள், நாட்டின் பொருளாதார நிலைமை, பண வீழ்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் பகுதி, பகுதியாக விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
நான்கு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட முழு முடக்கம், இதுவரை 19 கட்டங்களாக பகுதி, பகுதியாக விலக்கப்பட்டு வருகின்றன.
கடைசியாக நவம்பர் 30ஆம் தேதி அரசு அறிவித்த வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாடுகளுடன் கூடிய நெறிகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதே சமயம், மக்கள் நடமாட்டங்களையும் அவர்கள் கூடும் இடங்களிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகளையும் அறிவுறுத்தியது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1472782119449415686
இது தொடர்பாக கடந்த நவம்பர் 30ஆம் தேதி இந்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அளவில் சரிவு காணப்பட்டாலும், இன்னும் இரண்டு மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்களில் பாதிப்பு அளவு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், எட்டு மாநிலங்களில் 15 மாவட்டங்களில் பாதிப்பு அளவு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உள்ளதாக கூறியிருந்தார்.
https://twitter.com/PIB_India/status/1472793089194348548
இத்தகைய சூழலில்தான் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட ஒமிக்ரான் திரிபு பல வகைகளில் பரவி வருவதால், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை கொரோனா தற்காப்பு வழிகாட்டுதல் நெறிகளுடன் பொருந்திய வகையில் செயல்படுத்துமாறு மாநிலங்களை இந்திய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், இப்போது ஒமிக்ரான் பாதிப்பு பரவலாக சில மாநிலங்களில் தென்படுவதால், அதன் தீவிரத்துக்கு ஏற்ப மாநிலங்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷணுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகம் வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா கட்டாய பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு இன்னும் இந்திய அரசு தரப்பில் இருந்து பதில் வரவில்லை.
தற்போதைய நடைமுறைப்படி ‘கொரோனா ஆபத்தில் உள்ள’ என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகிறார்கள்.
கொரோனாவைத் தொடர்ந்து ஒமிக்ரான் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் அதை வெளிநாட்டில் இருந்து பரவி வரும் வைரஸ் ஆக மட்டும் கருதாமல் உள்நாட்டிலேயே பரவி வரும் அதன் ஆபத்தை தடுக்கும் வகையில் இனி மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
English abstract
omciron corona instances in tamilnadu. Corona restritions in tamailnadu.