Information
oi-Jeyalakshmi C
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் – 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்: ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் கண்ணனின், சிறப்புகளைச் சொல்லி பாடியிருக்கிறாள். ஆறாவது பாசுரத்தில் பாகவதர்களுடன் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, எழுப்புகிறாள்.
இந்த அழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் கீச் கீச் என்ற இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு என்று கூறி எழுப்புகிறாள். பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை,பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் ! என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை – பாடல் 6
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்
விடிந்த பின்னரும் படுக்கையில் உறங்கும் பெண்ணை தோழியர் எழுப்புகின்றனர். மான் போன்று அழகியவளே ! நாங்கள் எல்லோரும் உன் வாசலில் காத்திருக்கிறோம். இனிமேல் நானே உங்களையெல்லாம் வந்து நாளை முதல் எழுப்புவேன்” என்று சொல்லியிருந்தாய். உன் வாக்கு வக்கின்றிப் போய்விட்டதே. இருட்டுப் போர்வையை விலக்கி வானமும் எழுந்துவிட்டதே! உனக்கு வெட்கமாய் இல்லையா? வான், நிலம் இன்ன பிறவும் இவற்றில் இருப்போரும் முழுமையாய் சிவனை உணர முடியாது. மரக்கிளை ஒருவன் நிற்கும் இடம் நோக்கி நீண்டு வந்து நிழல் தருவது போல், சிவன் நமக்கு கருணை காட்டுகிறான். அதிசயம் அல்லவா இது? இவ்வளவு சிறப்புடைய சிவனின் திருவடிகளைப் போற்றிப் பாடுகிறோம். அவை உன்னைப் பாதிக்கவில்லையா? பதிலில்லையா? எங்களிடம் வாய் திறந்தேனும் பேசுவாய்! சிவன் சிறப்பு உன் காதில் விழவிழ உன் உடலும் மனதும் குழையவில்லையா? போற்றுவோர்க்கும், தூற்றுவோர்க்கும் ரட்சகனான ஈஸ்வரனைப் போற்றிப் பாடுகிறோம், நீயும் கலந்துகொள்வாய் என்று எழுப்புகின்றனர் பெண்கள்.
English abstract
Margazhi month on December 21,2021 Thirupavai and Thiruvempavai has begun within the Vishnu and Siva temples in all places Tamil Nadu. this is the music of Tirupavai and Tiruvempavai