Chennai
oi-Shyamsundar I
சென்னை: உலகம் முழுக்க பல நாடுகளில் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது “டெல்மிக்ரான்” பரவல் அதிகமாக இருப்பதாக பல்வேறு உலக நாடுகள் புகார் வைத்துள்ளன. அது என்ன டெல்மிக்ரான்? இது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸா என்று கேட்டால்.. இல்லை!
டெல்மிக்ரான் என்பது புதிய வகை உருமாறிய கொரோனா கிடையாது. மாறாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் இரட்டை அலைக்கு வைக்கப்பட்டு இருக்கும் பெயர் ஆகும். அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு பக்கம் ஓமிக்ரான் அலை ஏற்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கேஸ்கள் மிக வேகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. ஓமிக்ரான் ஏற்பட்டால் இன்னொரு பக்கம் டெல்டா வகை வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெல்டா அலை உச்சத்தை விட 3 மடங்கு அதிகரிக்கும் ஓமிக்ரான் – அமெரிக்க பல்கலைக்கழகம் கணிப்பு
டெல்டா
ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இப்போதும் டெல்டா தொடர்ந்து தீவிரமாக பதிவாகி வருகிறது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கையில் ஓமிக்ரான் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு டெல்டா கேஸ்களும் பதிவாகி வருகிறது. இப்படி இரட்டை அலை ஒரே சமயத்தில் ஏற்பட்டுள்ளதைதான் டெல்மிக்ரான் என்று கூறுகிறார்கள்.
டெல்மிக்ரான்
அதாவது டெல்டா அலை + ஓமிக்ரான் அலை இரண்டும் சேர்ந்து ஏற்படுத்தும் கேஸ்களைதான் டெல்மிக்ரான் என்று சேர்த்து சொல்கிறார்கள். மாறாக இது புதிய உருமாறிய கொரோனா வைரஸ் எல்லாம் கிடையாது. டெல்மிக்ரான் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் சிறிய அளவிலான கொரோனா சுனாமியை ஏற்படுத்திவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் ஒரு பக்கம் பெரும்பாலான மக்களிடம் பரவினாலும், டெல்டா பரவல் நிற்காமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
டெல்டா
ஒரு வகையான வைரஸ் அதிகமாக பரவி அது ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் மற்ற வகை வைரஸ்கள் பரவுவது குறையும். இதனால்தான் டெல்டா அளவிற்கு பீட்டா, காமா பரவவில்லை. ஆனால் தற்போது ஓமிக்ரான் ஒரு பக்கம் வேகமாக பரவினாலும் டெல்டாவின் வேகம் குறையாமல் அமெரிக்கா, ஐரோப்பாவில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் உடல்நலம் மோசமாக இருக்கும் நபர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வகையான கொரோனா வரும் வாய்ப்புகளும் உள்ளன.
இரண்டு வகை
இதற்கு முன்பே இப்படி நடந்துள்ளது. உடல்நிலை மிக மோசமாக இருக்கும் நபர்களுக்கு ஒரே நேரத்தில் டெல்டா, ஓமிக்ரான் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. யு.கேவில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. பிரான்சில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தொட்டு இருக்கிறது.
காரணம்
இதற்கு எல்லாம் காரணம் ஓமிக்ரான், டெல்டா இரண்டும் ஒரே நேரத்தில் பரவுவதால்தான். மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் பால் பர்டன் தெரிவிக்கையில் , டெல்டா, ஓமிக்ரான் இரண்டும் வேகமாக பரவி வருகிறது. உடல் நலிவடைந்த மக்கள் இரண்டு வகை கொரோனாவாலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
நடக்குமா?
அதே சமயம் டெல்டாவும், ஓமிக்ரானும் இணைந்து இன்னொரு புதிய வகை சூப்பர் வேரியண்ட் உருவாக வாய்ப்பு குறைவு. ஆனால் அது நடக்காது என்று சொல்லிவிட முடியாது. நிறைய பேருக்கு ஓமிக்ரான், டெல்டா கேஸ்கள் ஏற்படும் பட்சத்தில் அது புதிய வகை உருமாறிய கொரோனாவை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன என்று மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் பால் பர்டன் குறிப்பிட்டுள்ளார்.
English abstract
Coronavirus; What’s Delmicron? Why US and Europe are frightened about it?